வேர்ச்சொல்: கல் (பொருள்: கூட்டம்)
கல் – கல – கலத்தல் = சேர்த்தல் (‘பாலொடு தேன் கலந்து அற்றே’, குறள்.1121; ‘கலப்பேன்கொல்’, குறள்.1267); கல் – கல – கலவி = புணர்ச்சி, இணைதல் (‘கலவியும் புலவியும்’, சிலம்பு.புகார்.அந்தி.32. ஒ.நோ.: புல் – புல்லுதல் = பொருந்துதல்; புல் – புள் – புண் – புணர் – புணர்ச்சி = இணைதல்); கல் – கல் + து – கற்று – கற்றை = திரள் (‘கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பு’, பெரும்பாண்.150); கல் – கள் – களம் = வயற்களம் (‘பெருங்களம் தொகுத்த உழவர்’, அகம்.30:8); போர்க்களம் (‘களம்புகல் ஓம்புமின் தெவ்விர்’, புறம்.87:1); ஆடுகளம் (‘யானுமோர் ஆடுகள மகளே’, குறுந்.31:4); கல் – கள் – கண் = நிலைத்திணைகளின் இணைப்புப் பகுதி (‘கண் இடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பு’, மலை.6); கல் – கள் – கண் – கணம் = கூட்டம் (‘மான்கணம்’, புறம்.90:3); கல் – கள் – கள் + து – கண்டு = பொருள் திரட்சி (‘வாயூறு கண்டு’, தாயு.சித்தர்.8:1); கல் – கள் – கள் + து – கடு – கடுப்ப = உவம உருபு, பொருந்த (‘உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்’, புறம்.90:1); கல் – கள் – கள்+சி – கட்சி = பறவைகள் தங்கியிருக்கும் கூடு (‘குறும்பூழ் கட்சிச் சேக்கும்’, பெரும்பாண்.205; ‘கட்சிக் காணா கடமா நல்லேறு’, புறம்.202:2; ‘விரவார் மணிநிரைக் கட்சியுள் காரி கலுழ்ம்’, புறப்.வெண்.மா.2); கல் – கள் – கள்+து – கட்டு – கட்டுதல் = பிணைத்தல் (‘பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்’, குறுந்.21:2); கல் – கள் – கள் + து – கட்டு – கட்டி = பொருள் திரட்சி (‘தேம்பூங் கட்டி’, குறுந்.196); கல் – கள் – கள் + து – கண்டு = திரண்டது, கற்கண்டு (‘வாயூறு கண்டு’, தாயு.சித்தர்.7:1); திரண்ட நூற்கண்டு; கல் – கள் – கள் + து – கண்டு – கண்டம் (ஒ.நோ.: துண்டு – துண்டம்) = திரண்ட வடிவினது, பிரிந்தது (‘நெடுங்காழ்க் கண்டம்’, முல்லைப்.44.); தனித்த நிலப்பகுதி. (அ+கண்டம்-அகண்டம்=பிரிவு படாத பெரிய நிலப்பகுதி); கல் – கள் – கள் + து – கண்டு – கண்டம் – காண்டம் = நூலின் திரண்ட தனிப் பகுதி (‘புகார்க்காண்டம்’, ‘பாலகாண்டம்’).