வேர்ச்சொல்: கல் (பொருள்: கருமை)
கல் = கருமையான மலை (‘எருமை அன்ன கருங்கல்’ புறம்.5:1). ஒ.நோ.மல்(கருமை) – மல் + ஐ - மலை = கருமையான மலை (‘மணிமலை’, சிறுபாண்.1); கல் – கல் + ஐ – கலை = கரியநிறப் புள்ளிகள் கொண்ட மான் வகை (‘புள்ளி வரிக்கலை’, நற்.265:2); கல் – கல் + ஐ – கலை = ஆண் குரங்கு (‘மைபட்டன்ன மாமுக முசுக்கலை’, குறுந்.121:2); கல் – கற் – கறு – கறு + இ – கறி = கருநிறமான மிளகு (‘கருங்கறி மூடை’, பட்டி.186); கல் – கற் – கறு – கறை = கருநிறம் (‘கறையணல் குறும்பூழ்’, பெரும்பாண்.205); கல் – கற் – கர் – கரு – கருமை = கரிய நிறம் (‘கருங்கண்’, குறுந்.69:1); கல் – கற் – கர் – கரு – கரும்பு = கரிய நிறத் தண்டுடைய நிலைத்திணை (‘தீங்கரும்பு’, பொருநர்.216); கல் – கற் – கர் – கரு – கருப்பை = கருநிற எலி (‘அணிலொடு கருப்பை’, பெரும்பாண்.85); கல் – கற் – கர் – கரு - கரி = கருநிறமான எரிந்த மரக்கட்டை (‘கரிக்குறடு’, குறுந்.198:4); கருநிற யானை (‘கரிமுக அம்பி’, சிலம்பு.மதுரைக்.புறஞ்சேரி.176); கல் – கல் + வு – கவ்வு – கவ்வை = கருநிற எள் (‘கவ்வை கறுப்ப’, மதுரைக்.270, புறம்.120:10); கல் – கல்+கு-கங்கு – கங்குல் = கருநிறமுள்ள இரவு (‘ஆரிருட் கங்குல்’, குறுந்.153:4); கல் – கய் – கயம் = கரிக்குருவி (‘கோக்கயம்’, திருவாலவா.60:13); கருநிற யானை (‘திக்கயம்’, கம்ப.யுத்த.இராவணன்.32:1); கல் – கள் – களம் = கருநிறக் களங்கனி (‘களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்’, புறம்.127:1); கல் – கள் – கள்வன் = கருநிறப் புள்ளிகள் கொண்ட நண்டு (‘புள்ளிக் கள்வன்’, ஐங்.21:2); கல் – கள் – களர் = கரிய நிலம் (‘களர் வளர் ஈந்து’, பெரும்பாண்.130); கல் – கள் – களி = கரிய வண்டல் மண் (‘இருங்களி’, நெடுநல்.14). (இரும் = கருமை)