
Tamil Roots and PIE Roots
தமிழ் – இந்தோ – ஐரோப்பிய வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டம்
மக்கள் வாழ்க்கையிலிருந்து மொழி உருவானது. மக்கள் வாழ்க்கை வளர வளர, மொழியும் வளர்ந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மக்கள், உலகத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் யாவும் மக்கள் வளர்த்த மொழியில் கலந்துள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் சந்தித்த பொருள்களும், சந்தித்த நிகழ்வுகளும் குறிப்பிட்ட எண்ணிக்கைகட்கு உட்பட்டன. மக்கள் பேசும் மொழியில் பல்லாயிரக் கணக்கான சொற்கள் இடம் பெற்றிருந்தாலும், அவை யாவும் ஒரு குறிப்பிட்ட பொருண்மைகளுக்குள் (சந்தித்த பொருள்கள், சந்தித்த நிகழ்வுகள்) உட்பட்டவையே ஆகும்.
கருமை, செம்மை, வெண்மை போன்ற நிறங்கள்; மேடு, பள்ளம், முன், பின், அண்மை, தொலைவு, விரைவு, ஓய்வு, வலிமை போன்ற பொருளின் தன்மைகள்; ஓடுதல், நடத்தல், தூங்குதல், சேர்தல், குறைத்தல், துளைத்தல், சுடுதல், ஆற்றுதல், எண்ணுதல், ஒப்பிடுதல், எடுத்தல், கூராக்குதல், சுவைத்தல், வெப்பமாக்குதல் போன்ற வினை வேறுபாடுகள் என்பனவற்றைச் சார்ந்தே உலகின் எம்மொழியிலும் இடம்பெற்றுள்ள சொற்களின் பொருண்மைகள் அமைந்துள்ளன. தொல்காப்பியர் மொழியின் சொற்கள், சொன்மையையும் பொருண்மையையும் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டது இதனைத்தான் (பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர், தொல்.சொல்.153).